சர்வதேச சட்டம்: அரசுகளின் பொறுப்புடைமை – பகுதி 1
பாவனையில் உள்ள சட்டங்களை சகலரும் அறியக்கூடிய வகையில் எளிய தமிழில் வழங்குவதே எங்கள் பதிவுகளின் முக்கிய நோக்கமாகும். அந்த வகையில் “சர்வதேச சட்டம்: அரசுகளின் பொறுப்புடைமை” என்ற தொடர், 4 பகுதிகளாக வெளிவர உள்ளது. அதன் முதல் பகுதி இன்று வெளிவருகின்றது.
அரசு சார்பாக உத்தியோகபூர்வமாக தொழிற்படும் அதிகாரிகள் உயர்நிலையிலோ அல்லது கீழ் நிலையிலோ இருப்பினும் அவர்களினால் நிறைவேற்றப்படும் செயல்கள் அரசினால் செய்யப்பட்டவையாக கருதப்படும். இந்த கூற்றானது சர்வதேச சட்ட ஆணைக்குழுவால் (ஐ.எல்.சி) 2001ல் வெளியிடப்பட்ட சர்வதேச ரீதியிலான தவறான செயல்களுக்கு அரசு கொண்டுள்ள பொறுப்புக்கள் பற்றிய வரைவின் (இனிவரும் சர்ந்தப்பங்களில் இவ்வரைவு ஜ.எல்.சி உறுப்புரைகள் என குறிப்பிடப்படும்) உறுப்புரை 4ல் விளக்கமாக கூறப்பட்டுள்ளது.
இதனை மேலும் ஆராயவேண்டுமெனில் முதலில் அரசின் பொறுப்புடைமை பற்றிய பொதுவான கடப்பாடுகளை கவனத்தில் கொள்ள வேண்டும். இது சர்வதேச சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடாவதுடன் சர்வதேச சட்ட முறைமையின் தன்மை, நாட்டின் இறைமைக்கோட்பாடு, பாரபட்சமி;ன்மை ஆகியவற்றிலிருந்து தோற்றம் பெற்றது. சர்வதேச சட்டத்தின்படி நாடுகள் தங்களை கட்டுப்படுத்தும் கடப்பாடுகளை மீறும் போது பொறுப்புடைமை உருவாகின்றது.
பொருத்தனைகள் தொடர்பான வியன்னா சமவாயத்தின் உறுப்புரை 18ல் நாடுகள் பொருத்தனையின் நோக்கத்தை தோற்கடிக்கக்கூடிய செயல்களை செய்வதை தவிர்க்க வேண்டும் என வெளிப்படுத்துவதன் மூலம் நாட்டின் பொறுப்புடைமை கோட்பாட்டை வலியுறுத்தும். இலங்கையின் அரசியலமைப்பின் உறுப்புரை 27(15)ல் அரச வழிகாட்டிக் கோட்பாடுகளின் கீழ் அரசானது நாடுகளிடையேயான தொடர்புகளுக்கு சர்வதேச சட்டத்திற்கும் உடன்படிக்கை கடப்பாடுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்பதுடன்; உறுப்புரை 157ல் பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்படும்; தீர்மானத்தின் மூலம் பொருத்தனையை அல்லது உடன்படிக்கையை ஆக்கமுடியும் எனவும் வெளிப்படுத்தியுள்ளது.
சர்வதேச மனித உரிமைச் சட்டத்திலும் நாடுகளின் பொறுப்புடைமை பரந்தளவில் பிரயோகிக்கப்பட்டு வருகின்றன. இங்கு நாடுகளின் கடமையாக நபர்களுக்கு மதிப்பளித்தல், பாதுகாப்பு வழங்கல், தேவைகளை நிறைவேற்றல் போன்றன அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அரசானது மேற்குறித்த கடமைகளை செய்யாத போது மனித உரிமை மீறல் தவறிழைத்ததாக கருதப்படும். மேலே கூறப்பட்ட நாடுகளின் பொறுப்புடைமை கோட்பாடானது மனிதஉரிமைச் சட்டம், சர்வதேச சுற்றாடல் சட்டம், சர்வதேச கடல் சட்டம் போன்றவற்றில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
நாட்டின்; பொறுப்புசார் விடயங்கள் ஜ.எல்.சி ஆல் 1949ம் ஆண்டில் நாடுகளின் பொறுப்புடைமை (State Responsibility) எனும் தலைப்பில் விவாதிப்பதற்காக உள்ளடக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக ஐ.எல்.சி யின் 21 தொடக்கம் 24 வரையான அமர்வுகளிலும் 28 தொடக்கம் 31 வரையான (1969-1979) அமர்வுகளிலும்; விசேட பிரதிநிதி றொபேட் அகோ (Robert Ago) என்பவரால் எட்டு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
ஐ.எல்.சி யின் 32வது அமர்வில்(1980) சர்வதேச ரீதியில் தவறான செயல்களுக்கு நாடுகள் கொண்டுள்ள பொறுப்புடைமை (Responsibility of States for Internationally Wrongful Acts) எனும் தலைப்பில் முதல்பாகம் உறுப்பு நாடுகளால் ஏற்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து 48வது அமர்வில்(1996) அவற்றின் இரண்டாம், மூன்றாம் பாகங்கள் தரப்பினரால் கலந்துரையாடப்பட்டு ஏற்கப்பட்டது. இறுதியாக சகல நாடுகளிடமும் அபிப்பிராயம் பெறப்பட்டு இறுதி வரைவு அறிக்கை விசேட பிரதிநிதி ஜேம்ஸ் குரோபோட் என்பவரால் 2001ல் வெளியிடப்பட்டது.
இது உருவாக்கப்பட்டு 18 வருடங்கள் நிறைவடைந்த போதும் முழுமையான ஆவணம் இன்னமும் தயாரிக்கப்படவில்லை. இப்பொறுப்புடமை கோட்பாடானது இலகுவாக செயற்படுத்தி கொள்ள முடியாத அளவுக்கு சிக்கலானதாகவே இருந்துவருகின்றது. ஜ.எல்.சி யின் 65வது அமர்வில்(2010) இந்த உறுப்புரைகளில் உள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவது இலகுவானதல்லவெனவும் அதிகளவான பேச்சுவார்த்தைகளும் சமரச போக்கும் அவசியமாகும் என ஐக்கிய இராச்சிய பிரதிநிதி கூறியமை இக்கோட்பாடுகள் சர்வதேச ஒத்துழைப்புடன் மேலும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டுமென்பதையே காட்டும்.
இரு நாடுகளுக்குமிடைப்பட்ட நடைமுறையிலுள்ள சட்டரீதியான கடமை, குறித்த கடமையை மீறும் குற்றம் சாட்டப்படக்கூடிய செய்கை அல்லது செய்யாமை, இதனால் ஏற்பட்ட சேதம் பொறுப்புடைமையின் முக்கிய பண்புகளாகும். ஸ்பானிஷ் ஷோன் வழக்கில் குறித்த கடப்பாட்டை மீறியபோது நட்டஈடு வழங்கப்பட வேண்டுமென நீதிபதி கியுபரால் கூறப்பட்டது.
இதே கருத்து ஷொர்ஷோ தொழிற்சாலை வழக்கிலும்; தெரிவிக்கப்பட்டது. ஐ.எல்.சி உறுப்புரை 1ல் ஒவ்வொரு சர்வதேச ரீதியிலான தவறுக்கும் குறித்த நாடு பொறுப்பு கூறவேண்டியது இன்றியமையாததாகும். அடுத்த உறுப்புரையில் குறித்த கடப்பாட்டை செய்தல் அல்லது செய்யாமை காரணமாக ஏற்படும் தவறு சர்வதேச சட்டத்தின் கீழ் அரசுக்கு சாட்டப்படுவதுடன் அரசானது சர்வதேச கடப்பாட்டை மீறியதாகவே கருதப்படும். தேவைப்படுத்தப்பட்ட கடப்பாட்டை அரசு நிறைவேற்றத்தவறுமிடத்து சர்வதேச கடப்பாட்டு மீறல் நிகழும்.
தவறு தொடர்பான அடையாளப்படுத்தலில் புறவய பொறுப்புடைமை(Objective Responsibility Doctrine), அகவய பொறுப்புடைமை(Culpa Doctrine) எனும் இரு கொள்கைகள் பயன்படுத்தப்பட்டுவருகின்றன. முதலாவது வகையில் அரச அதிகாரியால் அல்லது அரசின் முகவரால் நலலெண்ணத்திலோ அல்லது கெட்ட எண்ணத்திலோ செய்யப்பட்ட தவறாயினும கடும் பொறுப்பு சுமத்தப்படும். நீர் வழக்கில் குடிமகன் ஒருவரின் மரணம் தொடர்பாக ஐக்கிய அமெரிக்கா வழக்கிட்டபோது இக்கொள்கை பயன்படுத்தப்பட்டபோதும் போதிய ஆதாரங்கள் இல்லாமையால் உரிமைக்கோரிக்கை மறுக்கப்பட்டது. ஆனால் கெய்ரே வழக்கில் மரணித்த ஒருவர் சார்பான கோரிக்;கை ஏற்கப்பட்டது.
மற்றைய கொள்கையில் தீய எண்ணம், அலட்சியம் ஆகியவற்றால் ஏற்படும் தவறுகளுக்கு பொறுப்பு சுமத்தப்படும். உரிமைக் கோரிக்கை வழக்கொன்றில் அரசின் கட்டுப்பாட்டை மீறி நடந்த கலவரத்திற்கு அரசின் பிரதிநிதிகள் பொறுப்பல்ல என்ற பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயத்தை காரணம் காட்டி இக்கொள்கை அங்கீகரிக்கப்படவில்லை. கொர்பு சனல் வழக்கில் அல்பேனியா கடற்பரப்பில் கண்ணவெடியில் சிக்கிய பிரிட்டன் போர்க்கப்பல் சேதமடைந்ததுடன் கடற்படை வீரர் இறந்தமைக்கு இக்கொள்கையினடிப்படையில் அல்பேனியா பொறுப்பாக்கப்பட்டது.
சர்வதேசரீதியில் தவறான செயலொன்றை அரச அதிகாரி அல்லது அதன் முகவர்கள் செய்யுமிடத்து அரசின்; மீது குற்றம் சாட்டுதல் கடந்த காலங்களில் பல்வேறு வழக்குகளில் வெளிக்காட்டப்பட்டுள்ளது. நிகாராகுவா வழக்கில் அரசின் முகவர்களால் அப்பகுதியில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டமை, துறைமுகத்திற்கு சேதம் விளைவித்தமை போன்றவற்றுக்காக ஐக்கிய அமெரிக்கா அரசு மீது குற்றம் சாட்டப்பட்டது. றெயின்போ வாரியர் வழக்கில் நியுசிலாந்து கடற்பரப்பில் பிரான்ஸ் அரசின் முகவர்களால் கடற்கலமொன்று அழிக்கப்பட்டமை தொடர்பில் அரசு பொறுப்பாக்கப்பட்டது.
(தொடரும்)
சட்டம் தொடர்பாக வெளியிடப்பட்ட எமது பதிவுகளை படிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள்
எங்களுடைய பதிவுகளை SMS இல் பெறுவதற்கு கீழே உங்கள் தொலைபேசி இலக்கத்தை பதிவுசெய்யுங்கள்
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.
எமது பதிவுகள்,செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் சமூகத்துடன் இணையுங்கள்