fbpx
Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.

சர்வதேச சட்டம்: அரசுகளின் பொறுப்புடைமை – பகுதி 4 (இறுதி பகுதி)

பாவனையில் உள்ள சட்டங்களை சகலரும் அறியக்கூடிய வகையில் எளிய தமிழில் வழங்குவதே எங்கள் பதிவுகளின் முக்கிய நோக்கமாகும். அந்த வகையில் “சர்வதேச சட்டம்: அரசுகளின் பொறுப்புடைமை” என்ற தொடர், 4 பகுதிகளாக வெளிவர உள்ளது. அதன் முதல் பகுதி, இரண்டாவது பகுதி & மூன்றாவது பகுதி ஏற்கனவே வெளிவந்திருந்தது. இன்று அதன் இறுதி பகுதி வெளிவருகின்றது.

சர்வதேச சட்டத்தின் கீழ் எவ்வகையான செயற்பாடுகளுக்கு அரசு பொறுப்புக்கூற வேண்டும் என தீர்மானிப்பதே ஐ.எல்.சி வரைவு ஆவணத்தின் நோக்கமாகும்.

அடுத்த மிகமுக்கிய தீர்வாக கருதப்படுவது தீங்கை ஏற்படுத்திய நாடு மீது நஷ்டஈடு வழங்கும் கடப்பாடு உருவாகுதலாகும். ஐ.எல்.சி உறுப்புரை 31ன் படி சர்வதேச ரீதியாக இடம்பெற்ற தவறுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்திய அரசானது முழு நட்டஈடு வழங்க வேண்டும் என கூறும்.

தொடர்ந்து உறுப்புரை 34ல் நட்டஈடானது, இழப்பீடு வழங்கல்(Compensation), மீள பழையநிலைக்கு கொண்டுவரல்(Restitution), திருப்தியடைதல்(Satisfaction) என வகைப்படுத்தப்படும். இது தனியாகவோ அல்லது சேர்ந்தோ நிவாரணமாக வழங்கப்படலாம்.


முதலாவது வகையில் தவறான செய்கை நடைபெறாவிட்டால் இருக்கக்கூடிய நிலைக்கு மீள கொண்டுவருவதைக் குறிக்கும். பாதிப்பின்பின் சர்ச்சைகளின் இயல்பு மாற்றமடைவதால் தற்போதைய காலத்தில் இது மிகவும் சாத்தியமற்றதாக உள்ளது. ரெம்பிள் பிறே விஹேர் வழக்கில் கம்போடியா கோவிலிலிருந்து சட்டவிரோதமாக கைப்பற்றப்பட்ட சமய சம்பந்தமான பொருட்களை மீள ஒப்படைக்குமாறு தாய்லாந்து அரசுக்கு கட்டளையிடப்பட்டது.


ஐ.எல்.சி உறுப்புரை 36ன் படி மீள பழையநிலைக்கு கொண்டுவரல் மூலம் நிவாரணம் பெறமுடியாத போது தவறுகள் மூலம் பாதிப்பை ஏற்படுத்திய அரசானது இழப்பீடு வழங்க வேண்டும் என கூறும். இது உண்மையான பாதிப்புக்கான செலவுகளையும் அதன்மூலம் ஏற்பட்ட இலாப இழப்புக்களையும் உள்ளடக்கியது. இது நியாயமான சந்தைப்பெறுமதியின் அடிப்படையில் கணிக்கப்படும் ; கொப்சிகோவோ வழக்கில் பாதிக்கப்பட்ட தரப்பினர் இழப்பீட்டை பெறுவதற்கான உரிமை சர்வதேச சட்டத்தில் நிலைநிறுத்தப்பட்ட விதி என கூறப்பட்டது.


உடல் உளரீதியாக(Non Material) பாதிக்கப்பட்டாலும் இழப்பீடு பெற்றுக்கொள்ள உரிமை உண்டு. இது காயம் மூலம் ஏற்பட்ட வலி, அவமரியாதை போன்றவற்றை உள்ளடக்கும். ஐம் எலோன் வழக்கில் கனடாவின் மரியாதைக்கு களங்கம் ஏற்படுத்தியமையால் குறித்த பணத்தொகை இழப்பீடாக வழங்குமாறு கட்டளையிடப்பட்டது.


மேற்படி இருமுறைகளிலும் நிவாரணத்தை பெறமுடியாத போது திருப்தியடைதல் முறை மூலம் பரிகாரம் வழங்கப்படலாம். இது தவறை ஏற்றுக்கொள்ளுதல், உத்தியோகபூர்வமாக மன்னிப்புக்கோருதல், மனவருத்தத்தை தெரிவித்தல் ஆகியவழிகள் மூலம் இணக்கத்திற்கு வருவதைக் குறிக்கும்.


இறுதியாக சமகால சர்வதேச அரசியலில் ஏற்பட்டுவரும் தவறுகள் தொடர்பாக அரசின் பொறுப்புடைமை பற்றிய நிகழ்வுகளை ஆராய்வது அவசியமாகும். சர்வதேச சட்டத்தில் சிக்கல் நிலை இருப்பது ஏற்றுக்கொள்ளப்பட்டபோதும் அச்சட்டம் இல்லாமையால் ஏற்படும் விளைவுகளைவிட சிக்கல் நிலை பெரிதாக தெரியாது.


அண்மையில் ஓமான் வளைகுடாவில் புறொன் அல்ரெயர் ( Front Altair) எனும் நோர்வே நாட்டுக்கு சொந்தமான கப்பல் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது. இதற்கு ஈரான் நாடு பொறுப்பாகும் என ஐக்கிய அமெரிக்காவின் செயலாளர் மைக் பொம்பியோ சில ஆதாரங்களுடன் குற்றம்சாட்டியபோதும், ஈரான் அதனை மறுத்துவரும் நிலையில் எதிர்காலத்தில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கிடப்படும்போது மட்டுமே பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதி கிடைக்கும்.


துருக்கி நாட்டில் வசித்துவந்த சவுதிஅரேபியா அரசியல் எழுத்தாளர் ஜமால் கஸோக்கி அந்நாட்டு தூதரக்கத்திற்குள் வைத்து படுகொலை செய்யப்பட்டார். பின்னர் துருக்கி அரசு மிகவலுவான ஆதாரங்களை வெளியிட்டதும் ஆரம்பத்தில் மறுத்துவந்த சவுதி அரேபியா தவறை அரசுடன் நேரடியாக தொடர்புபடாத சிலர் மேற்கொண்டதாக ஏற்று கொண்டதுடன் 5 நபர்களை வழக்குவிசாரணைகளுக்காக நாடுகடத்தவும் ஒப்புக்கொண்டுள்ளது.

இப்படுகொலை சம்பந்தமாக நீதிக்கபுறம்பான தண்டனைகள் தொடர்;பான ஐக்கிய நாடுகளின் சிறப்பு பிரதிநிதி (UN Special Rapporteur on Extrajudicial Executions) அக்னஸ் கலாமாட் இவ்வழக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இன்னமும் விசாரணைக்கு வராததால் ஐக்கிய நாடுகளின் செயலாளரையே குற்றம்சாட்டியிருந்தார்.

இது சர்வதேச மனித உரிமைகள் சமவாயத்திற்கு முரணானது என்பதால் சர்வதேச குற்றவிசாரணை கட்டாயமானது என்று கூறினார். சர்வதேச ரீதியில் பலம் வாய்ந்த நாடாக இருப்பதாலும், ஐக்கிய அமெரிக்கா சவுதி அரேபியாவின் நட்பு நாடாகவும் இருப்பதால் வழக்கு சர்வதேச நீதிமன்றத்திற்கு எடுத்து செல்லப்படவில்லை என விமர்சிக்கப்படுகின்றது.


2014ல் மலேசிய பயணிகள் விமானமான எம்.எச் 17 உக்ரேனில் சுட்டு வீழ்த்தப்பட்டமை தொடர்பாக நடைபெற்ற புலன்விசாரனை அறிக்கையில் ரஷ்யாவின் ஆதரவுபெற்ற பிரிவினைவாதிகள் நால்வரை சந்தேக நபர்களாக குறிப்பிட்டுள்ளது. இதனை ரஷ்யா உடனடியாக மறுத்துள்ளது.

இவ்வழக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது ஐ.எல்.சி உறுப்புரை 8ன் படி குறித்த பிரிவினைவாதிகளுக்கும் அரசுக்குமிடையிலான தொடர்பு வினைத்திறனான கட்டுபாட்டு (Effective Control) விதி மூலம் பரிசோதிக்கப்படலாம். இதனையொத்த 1992ல் ஸகொட்லாந்தில்; சுட்டுவிழுத்தப்பட்ட விமானம் தொடர்பான லொக்கர்பி வழக்கில் உலகநாடுகள் கடுமையான தடைகளை லிபியா மீது விதித்தமையால் தவறை அந்நாடு ஒப்புக்கொண்டதுடன் குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் நாடுகடத்தியது.


இதுவரையில் ஐ.எல்.சி உறுப்புரைகளின் அடிப்படையில் சர்வதேச ரீதியிலான தவறுகளுக்கு நாடுகள் எவ்வகையான சர்ந்தப்பங்களில் பொறுப்புடைமையாக்கப்படும் என்பது தீர்ப்புசட்டங்களின் துணைகொண்டும் சமகால அரசியல் நிகழ்வுகளினூடாகவும் ஆராயப்பட்டுள்ளது. அரச அமைப்பின் ஊழியர் எந்தமட்டத்திலிருப்பினும் அவரால் பதவியடிப்படையில் செய்யப்பட்ட சகல செயல்களும் அரசின் செயல்களாகவே கருதப்படும்.

இதனைவிட அரசில் நேரடியாக அங்கம் வகிக்காத நபர்களோ அல்லது குழுக்களோ அரசின் முகவராக, அரசின் ஆதரவோடு செய்த செயல்களும் அரசின் செயல்களாக கருதப்படுவதுடன் அச்செயல்கள் கடப்பாடு மீறதல் தொடர்பாக இருப்பின் அவை அரசின் பொறுப்புடைமையாகும்.

சட்டம் தொடர்பாக வெளியிடப்பட்ட எமது பதிவுகளை படிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள்

எங்களுடைய பதிவுகளை SMS இல் பெறுவதற்கு கீழே உங்கள் தொலைபேசி இலக்கத்தை பதிவுசெய்யுங்கள்

    இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.

    எமது பதிவுகள்,செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் சமூகத்துடன் இணையுங்கள்

    Back to top button